முதல் மனைவி மகன், மகளுடன் சேர்ந்து 2-வது மனைவிக்கு கொடுமை
கொப்பா தாலுகாவில், முதல் மனைவிக்கு பிறந்த மகன், மகளுடன் சேர்ந்து 2-வது மனைவியை விவசாயி ஒருவர் கொடுமைப்படுத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு:
விவசாயி
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா காரகேத்தே கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பா. விவசாயியான இவருக்கு ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒரு இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
அந்த பெண்ணுடன் அவர் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுடன், ரங்கப்பாவின் மகனும், மகளும் வசித்து வந்தனர். இந்த நிலையில் ரங்கப்பாவின் 2-வது மனைவி கர்ப்பமானார்.
ஆனால் வயதுக்கு வந்த மகனும், மகளும் இருப்பதால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று கூறி தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ரங்கப்பா கருக்கலைப்பு செய்தார். இதற்கு அவரது முதல் மனைவியின் மகனும், மகளும் உடந்தையாக இருந்தனர்.
கருக்கலைப்பு
தொடர்ந்து 2 முறை இதுபோல் கருக்கலைப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் ரங்கப்பாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ரங்கப்பாவும், அவரது மகன், மகள் மற்றும் குடும்பத்தினரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி, அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
நேற்று காலையிலும் அதேபோல் ரங்கப்பாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை தாக்கி உள்ளனர். பின்னர் ரங்கப்பாவின் மகன் அமித், தனது சித்தியான அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி வீட்டில் உள்ள ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏற்றி பாலேஹொன்னூர் அருகே உள்ள ஒரு காப்பித்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
போலீஸ் விசாரணை
அதையடுத்து அங்குள்ள ஒரு கேட் முன்பு அந்த இளம்பெண்ணை தாக்கி குண்டுக்கட்டாக தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து ஜீப்பில் சென்றுவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுபற்றி பாலேஹொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த இளம்பெண்ணை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story