கொடைக்கானலில் குளு குளு சீசனையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில்  குளு குளு சீசனையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 May 2022 9:42 PM IST (Updated: 14 May 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் குளு குளு சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில் தற்போது ‘குளு குளு’ சீசன் நிலவி வருகிறது. இதை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி இன்றுஅதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா இடங்கள் களைகட்டியது. 
இதனிடையே கடந்த 2 நாட்களாக மேகமூட்டம் நிலவிய நிலையில் இன்று காலை 11 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பல்வேறு இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். பலர் அறைகளிலும், வாகனங்களிலும் முடங்கினர். 

இதுகுறித்து சென்னையில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், தரை பகுதியில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் அதில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் வருகை தந்தோம். ஆனால் கொடைக்கானலில் பகல் நேரத்தில் மழை பெய்து சீசன் வித்தியாசமாக உள்ளது. இதனை அனுபவிப்பதற்காக கொடைக்கானலில் கூடுதலான நாட்கள் தங்க உள்ளோம் என்றனர்.
கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பைன்மரக்காடுகள், மோயர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா போன்றவற்றில் உற்சாகமாக பொழுதுபோக்கினர். அத்துடன் நட்சத்திர ஏரியில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி படகுசவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் அதிக வருகை காரணமாக அந்த தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story