கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் சிறப்பு தொழிற்கடன் மேளா
தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் சிறப்பு தொழிற்கடன் மேளா நடத்தப்படும் என்று, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறு, குறு தொழில் நிறுவன சங்கங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.அரசு கூடுதல் தலைமை செயலாளரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்தும் புதிய தொழில் தொடங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதி மற்றும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை நவீனமயமாக்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நிதியுதவி அளித்து தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது.
தொழிற்கடன் மேளா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்கடனுதவிகள் குறித்து திட்ட செயலாக்கம் மற்றும் கருத்து கேட்புக்காக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைச்சர்களின் ஒப்புதலுடன் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் விரைவில் சிறப்பு தொழிற்கடன் மேளா நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், கிளை மேலாளர் சுந்தரேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேஷ் மற்றும் சிறு, குறு சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story