கோவையில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய 8-ம் வகுப்பு மாணவியை இன்ஸ்டாகிராம் உதவியுடன் கண்டுபிடித்து போலீசார் மீட்டனர்
கோவையில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய 8-ம் வகுப்பு மாணவியை இன்ஸ்டாகிராம் உதவியுடன் கண்டுபிடித்து போலீசார் மீட்டனர்
கோவை
கோவையில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய 8-ம் வகுப்பு மாணவியை இன்ஸ்டாகிராம் உதவியுடன் கண்டுபிடித்து போலீசார் மீட்டனர்.
8-ம் வகுப்பு மாணவி
கோவையை சேர்ந்த 13 வயதான சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதனால் மாணவிக்கு அவருடைய பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அதன் மூலம் அந்த மாணவி பாடம் படித்து வந்தார்.
அப்போது அவர் இன்ஸ்டாகிராமை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் அதிக நேரம் செலவழித்து வந்ததாக தெரிகிறது.
அந்த சிறுமி எப்போதும் செல்போனில் இருந்ததால் அதை அவருடைய பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் இன்ஸ்டாகிராம் தோழியுடன் கூறி அழுதுள்ளார்.
திடீர் மாயம்
இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவி செல்போ னுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் அவரை தேடினார்கள். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து பெற்றோர் கோவை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததுடன், அந்த மாணவியை இன்ஸ்டாகிராம் உதவியுடன் கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் அந்த மாணவியின் தோழி ஒருவரை கண்டுபிடித்து, இன்ஸ்டாகிராம் மூலம் பேச வைத்தனர்.
ரெயிலில் செல்வதை கண்டுபிடித்தனர்
சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த அந்த தோழி, அவரிடம் நீ இப்போது எங்கே இருக்கிறாய்?, என்னிடம் சொன்னால் நானும் வந்திருப்பேன் அல்லவா? என்று கேட்டார்.
அப்போது அவர் ரெயிலில் சென்று கொண்டு இருப்பதும், அவருடைய பேச்சு விட்டுவிட்டும் கேட்டது.
பின்னர் வீடியோ காலில் 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த மாணவி கோவை-சென்னை விரைவு ரெயிலில் செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து தோழி மூலம் பேசவைத்த போலீசார் அந்த மாணவி, சென்னைக்கு சென்று கொண்டு இருப்பதையும், முன்பதிவு செய்யாத பெட்டியில் பின்பகுதியில் அமர்ந்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அதிரடியில் இறங்கிய போலீசார் அந்த மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவர் அரக்கோணம் அருகே சென்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அரக்கோணத்தில் மீட்பு
உடனே போலீசார் அரக்கோணம் போலீசாரை தொடர்ந்து கொண்டு அந்த மாணவியின் புகைப்படம், அடையாளத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ரெயில் அரக்கோணம் வந்தபோது, ஏற்கனவே அங்கு தயாராக நின்றிருந்த ரெயில்வே போலீசார் அந்த மாணவி இருந்த பெட்டிக்கு உடனடியாக சென்று, அங்கு தனியாக இருந்த அந்த மாணவியை மீட்டனர்.
பின்னர் போலீசார் அந்த மாணவியை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதில், மாணவியை பெற்றோர் செல்போன் பயன்படுத்தியதற்காக தினமும் கண்டித்து வந்ததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சென்னையில் விடுதியில் தங்கி படித்து வரும் தனது தோழியுடன் தங்கி படிக்க சென்னை சென்றது தெரியவந்தது.
Related Tags :
Next Story