சவுக்கு கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டரில் தீ விக்கிரவாண்டியில் பரபரப்பு


சவுக்கு கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டரில் தீ விக்கிரவாண்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 May 2022 10:44 PM IST (Updated: 14 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

சவுக்கு கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்டதால் விக்கிரவாண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த ரெட்டிகுப்பத்திலிருந்து பண்ருட்டியில் உள்ள  செங்கல் சூளைக்கு சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை பண்ருட்டியை சேர்ந்த பரசுராமன் (வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.

 ரெட்டிக்குப்பம் ரோட்டில் வந்த போது, அந்த பகுதியில் சென்ற மின்கம்பி மீது சவுக்கு மரக்கட்டைகள் உரசியுள்ளது. இதனால் மின்கம்பிகளில் இருந்து பறந்த தீப்பொறிகள், சவுக்கட்டைகள் மீது பற்றி எரிந்தது.

 இதை பார்த்த டிரைவர் பரசுராமன், உடனடியாக டிராக்டரை நிறுத்திவிட்டு, என்ஜினை மட்டும் தனியாக கழற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார்.

இதற்கிடையே டிராக்டரில் பற்றிய தீ, சாலையோரம் விவசாய நிலத்தில் இருந்த  கூரை  கொட்டகை மீதும் பற்றி எரிய தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த , விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

விபத்தில் டிராக்டர் டிப்பர், கூரை கொட்டகை முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story