வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம்-கலெக்டர் தகவல்
வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மானியம்
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
இதில் பயன்பெற வக்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும், தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். 18 லிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆவணங்கள்
விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, வயது சான்று, புகைப்படம், சாதி சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வக்புவில் பணிபுரிவதற்கான சான்று ஆகியவற்றை மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.11, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story