வாலிபர் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது


வாலிபர் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது
x
தினத்தந்தி 14 May 2022 10:56 PM IST (Updated: 14 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் நகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த மாதம் பழைய பஸ் நிலையம் பகுதியில் போலீஸ் துணைசூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை மடக்கி பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொருவரை பிடித்து விசாரித்தனர். அவர் கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெடுமன்காடு, அட்டின்புரம் சகாபுதீன் மகன் ஷபீக் (வயது36) என்பதும் ஏர்வாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யப்பட்ட நிலையில் பிசுபிசுப்புத்தன்மையுடன் கூடிய எண்ணெய் இருந்ததை கண்டு அதனை பறிமுதல் செய்து பார்த்தபோது அது கஞ்சா எண்ணெய் என்பது தெரிந்தது. அதன் எடை 1கிலோ 36 கிராம் என்பதும், அதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஏர்வாடி முத்தரையர்நகரை சேர்ந்த ஜகாங்கீர் சுல்தான் மகன் ஜாவித் ரகுமான் (31) என்பரை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாவித் ரகுமான் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பி செல்ல முயன்றாராம். விமான நிலையத்தில் அவரின் விவரங்களை பரிசோதித்த அதிகாரிகள் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் கேரளா மாநிலம் கொச்சின் சென்று ஜாவித் ரகுமானை கைது செய்து அழைத்து வந்தனர்.

Related Tags :
Next Story