மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: 2026ம் ஆண்டு பாமக ஆட்சி அமைக்கும் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: 2026ம் ஆண்டு பாமக ஆட்சி அமைக்கும் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 14 May 2022 11:25 PM IST (Updated: 14 May 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

தர்மபுரி:
மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.க்கள் செந்தில், பாரிமோகன் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் மறைந்த பா.ம.க. நிர்வாகிகள் மன்னன், சுப்பிரமணியன், ஸ்ரீசிவம் ஆகியோரது உருவப்படங்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாற்ற பாடுபடுவேன்
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் தர்மபுரி. இதை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று நான் சபதம் எடுத்தேன். 5 ஆண்டுகள் எம்.பி.யாக. பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழகத்தில் முதல் 5 மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரியை மாற்ற பாடுபடுவேன் என உறுதி அளித்தேன். இப்போதும் அந்த உறுதிமொழியை அளிக்கிறேன். பதவி பொறுப்புகாக நாம் கட்சிக்கு வரவில்லை. மிகவும் பின்தங்கிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அழைத்ததால் இந்த இயக்கத்திற்கு வந்தோம். 
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணை ஆகிய 2 ஆறுகள் ஓடிய போதும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. பா.ம.க. நடத்திய மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிய தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை அல்ல. அவர்கள் கடமையைத்தான் செய்தார்கள்.
ஆட்சி அதிகாரத்தை வழங்குங்கள்
உண்மையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி பா.ம.க. தான் சாதனை செய்தது. தற்போது புதிதாக திராவிட மாடல் என்று சொல் திடீரென உருவாகி உள்ளது. 10,11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மதுபாட்டில்களை கையில் பிடித்து மது அருந்தும் நிலை உருவாகி இருப்பது தான் திராவிட மாடல். 
பாட்டாளி மாடலை நடைமுறைப்படுத்த எங்களிடம் ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை வழங்குங்கள். தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இல்லாத மது விலக்கு அமல், இலவச கல்வி, இலவச மருத்துவம், விவசாய விளை பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்து கொள்ளும் நிலை ஆகியவையே பாட்டாளி மாடலாகும். 
இட ஒதுக்கீடு
கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் மூத்த நிர்வாகிகள் உடன் இணைந்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைக்கும். இதற்காக பல்வேறு திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். தர்மபுரி மாவட்டம் முன்னேற காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்- 2 உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் மாவட்டத்தில் இருந்து வேலை தேடி வெளியூர் சென்றுள்ள இளைஞர்கள் மீண்டும் நமது மாவட்டத்திற்கு திரும்புவார்கள். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் எனது தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டில் உள் இட ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றி நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரவேற்பு
முன்னதாக கூட்டத்துக்கு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தர்மபுரி நகர எல்லையான குண்டலப்பட்டியில் மேளதாளங்கள் முழங்க பா.ம.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் நிர்வாகிகள் அணிவகுத்து தர்மபுரி நகருக்கு அழைத்து வந்தனர்.

Next Story