குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 14 May 2022 11:29 PM IST (Updated: 14 May 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் நடந்த குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமில் ஒரே நாளில் 956 மனுக்கள் பெறப்பட்டன.

வேலூர்

வேலூர் மாவட்டம் முழுவதும் நடந்த குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமில் ஒரேநாளில் 956 மனுக்கள் பெறப்பட்டன. 

சிறப்பு முகாம்

பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை தொடர்பாக திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த முகாமை மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் பார்வையிட்டார். ஏற்கனவே புதிய அட்டைக்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு புதிய அட்டைகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில், வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் (நுகர்பொருள்) வேணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காட்பாடி

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் ரேஷன்அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவை தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். 
முகாமில் வருவாய்த்துறை ஆய்வாளர் தீனதயாளன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

956 மனுக்கள்

மாவட்டத்தில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, வேலூர், காட்பாடி என 6 தாலுகாவில் நடந்த முகாம்களில் புதிய ரேஷன் அட்டைக்கு 23 பேரும், முகவரி மாற்றம் மேற்கொள்ள 100 பேரும், பெயர் சேர்க்க 107 பேரும், நீக்கம் செய்ய 86 பேரும், செல்போன் எண் மாற்றம் செய்ய 256 பேரும் மற்றும் இதர திருத்தங்கள் உள்பட மொத்தம் 956 மனுக்கள் வரப்பெற்றதாகவும், இதில் 158 மனுக்கள் விசாரணையில் உள்ளதாகவும் மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story