உளுந்துபயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்


உளுந்துபயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்
x
தினத்தந்தி 15 May 2022 12:09 AM IST (Updated: 15 May 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கி கூறியுள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-
நோய் தாக்குதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் விவசாயிகள் நஞ்சை தரிசு உளுந்து பயிரிட்டுள்ளனர். அந்த பயிரானது தற்போது நன்கு வளர்ந்து பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.
தூத்துக்குடி வட்டாரத்தில் சில பகுதிகளில் உள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு தென்படுகிறது. இந்த நோய் தாக்குதல் அதிகரித்தால் 50 முதல் 70 சதவீதம் வரை மகசூல் குறைய வாய்ப்புள்ளது. வெள்ளை ஈ என்ற பூச்சி மூலம் இந்த நோய் பரவுகிறது.
அறிகுறிகள்
நோய் தாக்குதலால் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, புதிதாக தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுக்கள் தென்படும். 
நோய் தாக்கப்பட்ட பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன் காலந்தாழ்த்தி முதிர்ச்சி அடைதல், மிகக் குறைந்த அளவு பூக்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்தல் ஆகியவை முக்கியமான அறிகுறிகளாக காணப்படுகிறது.
இந்த நோயில் இருந்து உளுந்து பயிரை காப்பாற்ற விவசாயிகள் நோய் பாதித்த வயலில் இருந்து பெறப்படும் விதைகளை மறுவிதைப்பிற்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்திக்குரிய வம்பன் 8 ரகங்களை பயிரிடுதல் வேண்டும்.
கட்டுப்படுத்துதல்
உளுந்து மஞ்சள்சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைதல் வேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஒரு ஹெக்டருக்கு 12 எண்ணம் நிறுவுதல் வேண்டும்.
இம்டாகுலோபிரிட் 17.8 எஸ்.எல். ஹெக்டருக்கு 200 மில்லி அல்லது டைமீத்தோயேட் 30 இ.சி. ஹெக்டரு்கு 500 மில்லி அல்லது தையோமீதாக்ஸம் 75 டபுள்யூ. எஸ். ஹெக்டருக்கு 100 கிராம் என்ற அளவில் தெளித்தல் வேண்டும்.தேவைப்பட்டால் 15 நாள் கழித்து மற்றொரு முறை இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story