குமரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்;181 மனுக்களுக்கு உடனடி தீர்வு
குமரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் 181 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்கள் வாரியாக வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேற்று ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடந்தன.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு வட்ட வழங்கல் அதிகாரி ஜெகதா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.
181 மனுக்களுக்கு தீர்வு
இதேபோல் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரி துர்கா ரவீந்திரனும், தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிகாரி மரிய ஸ்டெல்லாவும், குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிகாரி புரந்தரதாசும், திருவட்டார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிகாரி மேத்யூ ஜெயஜோஸ்சும், கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிகாரி ஹேமாவும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.
அப்போது புதிய ரேஷன் கார்டு, நகல் ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், செல்போன் எண் மாற்றம், ரேஷன் கடை தொடர்பான புகார்கள் போன்றவை குறித்து இந்த 6 தாலுகாக்களிலும் மொத்தம் 203 புகார் மனுக்கள் வழங்கப்பட்டன. அதில் நேற்றைய தினமே 181 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 22 மனுக்களின் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களின் காரணமாக நேற்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story