வியாபாரிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
சேரன்மாதேவியில் சாலையில் புழுதி பறப்பதை கண்டித்து, வியாபாரிகள் தங்கள் கடைகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியில் சாலையில் புழுதி பறப்பதை கண்டித்து, வியாபாரிகள் தங்கள் கடைகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
புழுதி பறக்கும் சாலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முதல் பாபநாசம் வரை தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் மண் கொட்டப்பட்டு, ஜல்லி கற்கள் பரப்பி தார் போடப்பட்டு வருகிறது. சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதியில் சாலை விரிவாக்க பணியானது கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் நடந்த சாலை விரிவாக்க பணியின்போது, பத்தமடையில் ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனால் நடந்த போராட்டத்தால் கடந்த 10 நாட்களாக சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் சாலை விரிவாக்க பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மண் கொட்டப்பட்ட இடங்களில் ஈரப்பதம் இல்லாமல் சாலை முழுவதும் புழுதி பறப்பதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், சாலையோர கடைகள், வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கருப்புக்கொடி கட்டி போராட்டம்
இதுதொடர்பாக சேரன்மாதேவி வியாபார சங்க உறுப்பினர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே கேட், பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மூடப்பட்டுவதாக ெரயில்வே துறை அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ெரயில்வே கேட் அருகில் அறிவிப்பு பலகை வைத்தனர். இதனால் சேரன்மாதேவிக்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் பை-பாஸ் ரோடு வழியாக வரும் என்பதை அறிந்த வியாபாரிகள், வியாபார சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், சாலையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை செல்போனிலும், நேரிலும் தொடர்புகொண்டபோது அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் சேரன்மாதேவி ரவுண்டானா முதல் பள்ளிவாசல் வரை உள்ள கடைகளிலும், வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதே நிலை நீடித்தால் வருகிற 17-ந் தேதி சாலை மறியல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story