மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்துக்கட்சி போராட்டம் தேவை


மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்துக்கட்சி போராட்டம் தேவை
x
தினத்தந்தி 15 May 2022 1:44 AM IST (Updated: 15 May 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்துக்கட்சி போராட்டம் தேவை என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.

தஞ்சாவூர்:
மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்துக்கட்சி போராட்டம் தேவை என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.
சிறப்பு கருத்தரங்கம்
‘மேகதாதுவை தடுப்போம், மேட்டூர்-முல்லைப்பெரியாறு அணைகளை காப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் நேற்று நடந்தது. தனசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த என்ஜினீயர்கள் சங்க தலைவர் வீரப்பன், தஞ்சை மாவட்ட தலைவர் பரந்தாமன், என்ஜினீயர் செந்தில்வேலன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பாரதிசெல்வன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் அகமதுகபீர் ஆகியோர் பேசினர்.
பேட்டி
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மணியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் உயிர் நீரோட்டமாக உள்ள காவிரி நீர் உரிமையை மீட்க அனைத்து பகுதி மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது. என்ன விலை கொடுத்தாவது மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.
அனைத்து கட்சி போராட்டம்
மேகதாது அணை கட்டப்படாமல் தடுக்க அனைத்து கட்சிகள், உழவர் அமைப்புகள் கூட்டம் நடத்தி காவிரி காப்பு எழுச்சி நாள் என ஒரு நாள் அறிவித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேகதாது அணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி தடை ஆணை பெற சிறப்பு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அணை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்யக்கோரி மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அரசு வழக்கு தொடுத்துள்ளது. அது மட்டும் போதாது.
வழக்குகள் ரத்து
ஆளும் கட்சி என்ற முறையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அணை உரிமை பறிப்பு சட்டத்தை ரத்து செய்ய மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். காவிரி உரிமைக்காக போராடியோர் மீது போட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story