ஆன்லைனில், வியாபாரி இழந்த ரூ.52 ஆயிரம் மீட்பு


ஆன்லைனில், வியாபாரி இழந்த ரூ.52 ஆயிரம் மீட்பு
x
தினத்தந்தி 14 May 2022 8:25 PM GMT (Updated: 14 May 2022 8:25 PM GMT)

முககவசம் விற்பதாக கூறி ஆன்லைனில் வியாபாரியிடம் ரூ.52 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இந்த பணம் போலீசாரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டது.

சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 40). வியாபாரியான இவர், கடந்த மார்ச் மாதம் முககவசம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடி பார்த்தார். அதில் ஒரு தனியார் நிறுவனத்தின் செல்போன் எண்ணுக்கு மணி தொடர்பு கொண்டார். இதில் மறுமுனையில் பேசிய நபர், மணியிடம் 5 ஆயிரம் மதிப்பிலான முககவசத்தை ரூ.52 ஆயிரத்து 500-க்கு தருவதாக கூறினார். இதை நம்பிய அவர், அந்த நபரின் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்தினார். பின்னர் அந்த நபர் முககவசம் அனுப்பாமல் ஏமாற்றி வந்தார். இதையடுத்து தான் மர்ம நபரால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மணி இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் முயற்சியால் மர்ம நபரின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மணியின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.

Next Story