இளம்பெண் மீது திராவகம் வீசிய தமிழக வாலிபர் நாகேஷ் சிக்கியது எப்படி?; பரபரப்பு தகவல்கள்


இளம்பெண் மீது திராவகம் வீசிய தமிழக வாலிபர் நாகேஷ் சிக்கியது எப்படி?; பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 14 May 2022 9:18 PM GMT (Updated: 14 May 2022 9:18 PM GMT)

இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த தமிழக வாலிபர் நாகேஷ் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

  பெங்களூரு ஹெக்கனகட்டே கிராசில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவரை ஒருதலையாக காதலித்து வந்த நாகேஷ்(வயது 29) என்பவர் தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தால் இளம்பெண் மீது திராவகம் வீசினார். பின்னர் தலைமறைவான அவரை நேற்று முன்தினம் தமிழ்நாடு திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

  இந்த நிலையில் 16 நாட்களாக தலைமறைவாக இருந்த நாகேஷ் சிக்கியது எப்படி? என்பது குறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  சம்பவத்தன்று இளம்பெண் மீது நாகேஷ் திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெரியம்மா வீட்டில் நாகேஷ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு வசித்து வந்தார்.

நண்பர் மூலம் தகவல்

  அப்போது இளம்பெண்ணுடன், நாகேஷ் பழக்கம் ஏற்படுத்தி கொள்ள முயற்சி செய்தார். ஆனால் இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரம் நாகேஷ் அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் நாகேசின் காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் நாகேஷ் வீட்டை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான தமிழ்நாட்டிற்கு சென்று விட்டார்.

  ஆனாலும் இளம்பெண் வீட்டின் அருகே வசித்து வரும் தனது நண்பர் ஒருவர் மூலம் இளம்பெண்ணை பற்றிய தகவலை நாகேஷ் தெரிந்து வைத்து இருந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணின் சகோதரிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். சகோதரியின் திருமணம் முடிந்ததும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருப்பதாக தனது நண்பர் மூலம் நாகேஷ் தெரிந்து கொண்டார்.

போலி லெட்டர் பேடு

  இதனால் அவர் பெங்களூருவுக்கு வந்து இளம்பெண்ணின் பெரியம்மாவை சந்தித்து இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண்ணின் பெரியம்மா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஷ் இளம்பெண் மீது திராவகம் வீச முடிவு செய்தார். இதன்பின்னர் வீட்டை சுத்தம் செய்து கொடுக்கும் ஒரு
நிறுவனத்தின் பெயரில் போலியாக லெட்டர்-பேடு தயாரித்த நாகேஷ், அந்த லெட்டர்-பேடை இணையதளம் மூலம் ஆசிட் வினியோகம் செய்யும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

  அந்த லெட்டரில் சோலார் தகடை சுத்தம் செய்ய திராவகம் வேண்டும் என்று நாகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த ஆய்வகம் கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு லிட்டர் திராவகத்தை நாகேசின் முகவரிக்கு அனுப்பி வைத்து இருந்தது. இதனை தொடர்ந்து மேலும் 8 லிட்டர் திராவகம் அந்த ஆய்வகம் மூலம் நாகேஷ் வாங்கினார்.

சரண் அடைந்துவிடும்படி....

  இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இளம்பெண் வேலை செய்து வரும் நிதி நிறுவனத்திற்கு சென்ற நாகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணிடம் தகராறு செய்து உள்ளார். அப்போதும் இளம்பெண் மறுத்து உள்ளார். அப்போது அங்கு வந்த நிதி நிறுவன மேலாளர், நாகேசை எச்சரித்து அனுப்பி வைத்து உள்ளார்.

  இதன்பின்னர் ஏற்கனவே திட்டம் தீட்டியபடி கடந்த 28-ந் தேதி காலை அந்த நிதி நிறுவனத்திற்கு சென்ற நாகேஷ், வேலைக்கு வந்த இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். பின்னர் தனது நண்பர், சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நாகேஷ், இளம்பெண் மீது திராவகம் வீசியது பற்றி கூறியுள்ளார். அப்போது நண்பரும், சகோதரரும் நாகேசிடம் போலீசில் சரண் அடைந்துவிடும்படி கூறியுள்ளனர்.

தற்கொலை செய்ய முடிவு

  ஆனாலும் அதை ஏற்க மறுத்த நாகேஷ் 2 வக்கீல்களிடம் பேசி உள்ளார். அப்போது நீதிமன்றத்தில் வந்து சரண் அடைய விரும்புவதாக கூறி உள்ளார். ஆனால் வக்கீல்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் சரண் அடைய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து நாகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டைக்கு சென்றார். அங்கு சென்றதும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு ஏரிக்கு நாகேஷ் சென்று உள்ளார்.

  அந்த ஏரியில் குதித்து தற்கொலை செய்ய நாகேஷ் முடிவு செய்து உள்ளார். ஆனால் அவரது மனம் மாறி விட்டது. இதனால் அவர் திருப்பதி செல்வதற்காக ஒசக்கோட்டையில் இருந்து மாலூருக்கு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் திருப்பதி செல்லும் முடிவையும் கைவிட்டு தமிழ்நாட்டிற்கு செல்ல முடிவு செய்து உள்ளார். அதன்படி மாலூர் சென்ற அவர் மாலூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று உள்ளார்.

செல்போன் பயன்படுத்தவில்லை

  இதன்பின்னர் அங்கு உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று தான் யாரும் இல்லாத அனாதை என்று கூறி பதுங்கி இருந்துள்ளார். மேலும் காவி உடை அணிந்து பக்தர்போல் அங்கு தங்கி இருந்தார். தினமும் காலை எழுந்து தியானமும் செய்துள்ளார். அவர் செல்போனையும் பயன்படுத்தவில்லை.

  இந்த நிலையில் நாகேசை பிடிக்க அமைக்கப்பட்டு இருந்த 7 தனிப்படை போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட நாகேஷ் சென்று வந்த ஆன்மிக தலங்களுக்கு சென்று அவரை தேடினர்.

இன்ஸ்பெக்டருக்கு தகவல்

  இதற்கிடையே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நாகேஷ் பற்றிய நோட்டீசுகளை தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், முக்கிய இடங்களில் போலீசார் ஒட்டி இருந்தனர். இந்த நிலையில் நாகேஷ் தங்கி இருந்த ஆசிரமத்தில் இருந்து காமாட்சிபாளையா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த்துக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எங்கள் ஆசிரமத்தில் கடந்த 15 நாட்களாக ஒருவர் தங்கி உள்ளார். அவர் கையில் திராவகம் பட்ட காயம் உள்ளது என்று கூறியுள்ளார்.

  மேலும் நாகேசின் புகைப்படத்தை இன்ஸ்பெக்டர் பிரசாந்த்துக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பினார். அந்த புகைப்படத்தை பார்த்த இன்ஸ்பெக்டர் பிரசாந்த், அது நாகேஷ் தான் என்பதை உறுதி செய்தார்.

கோர்ட்டில் விரைவில்...

  பின்னர் திருவண்ணாமலையில் நாகேசை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த மாகடி ரோடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவண்ணாவுக்கு, இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்த ஆசிரமத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவண்ணா, போலீஸ்காரர் ரவிக்குமார் ஆகியோர் நாகேசை லாவகமாக சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், ‘நான் இளம்பெண்ணை உயிருக்கு, உயிராக காதலித்தேன். இப்போதும் கூட இளம்பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்’ என்று நாகேஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  கடந்த 2020-ம் ஆண்டே இளம்பெண் மீது திராவகம் வீச நாகேஷ் முடிவு செய்து அப்போதே திராவகம் வாங்கி வைத்து இருந்தார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் மனம் மாறி இருந்தார். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு நாகேசை கைது செய்த போலீசாருக்கு ரூ.3 லட்சம் சன்மானம், ரூ.2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. போலீசாருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். கூடிய விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நாகேசுக்கு தண்டனை பெற்று கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story