சென்னிமலையில் ரோட்டில் வாகன போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணி; நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்
சென்னிமலையில் ரோட்டில் வாகன போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
சென்னிமலை
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகம் முழுவதும் சாலைகளில் செல்லும் வாகனங்களை கணக்கெடுப்பது வழக்கம். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களும் அதிகரித்து வருவதால் அதற்கான சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கடந்த 9-ந் தேதி தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி நாளை (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது.
அதன்படி சென்னிமலை பகுதியிலும் இந்த பணி நடந்தது. பெருந்துறை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கதிர்வேல் தலைமையில், உதவி பொறியாளர் பூபாலன், சாலை ஆய்வாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலையில் சென்னிமலை பகுதியில் காங்கேயம் ரோடு, வெள்ளோடு ரோடு, அறச்சலூர் ரோடு, ஊத்துக்குளி ரோடு மற்றும் கொடுமணல் ரோடு ஆகிய இடங்களில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதேபோல் வெள்ளோடு பகுதியிலும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 2 பேர் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த 12 பணியாளர்கள் இரவு, பகலாக சாலையில் செல்லும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர். சென்னிமலை காங்கேயம் ரோட்டில் மட்டும் 15 நிமிடத்திற்குள் 600 வாகனங்கள் சாலையில் செல்வதாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story