கர்நாடக மந்திரிசபை நாளை மாற்றியமைப்பு?
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கர்நாடக மந்திரிசபை மாற்றியமைப்பு நாளை(திங்கட்கிழமை) நடைபெறலாம் என்றும், மேலிட தலைவர்களின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
அமித்ஷாவுடன் சந்தித்து பேச்சு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு(2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 150 தொகுதிகளில் வெற்றிபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலையொட்டி மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், மந்திரிசபையை மாற்றியமைக்கவும் பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசுவதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 2 மாதங்களாக 3 முறை டெல்லிக்கு சென்றிருந்தார். கடந்த 11-ந் தேதி டெல்லிக்கு சென்ற அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
தலைவர்களுடன் ஆலோசனை
அப்போது இன்னும் 4 நாட்களுக்குள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற தலைவர்களுடன் ஆலோசித்து விட்டு தகவல் அனுப்புவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் அமித்ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று காலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மந்திரி கோவிந்த் கார்ஜோள், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுடனும், நேற்று முன்தினம் மாலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசி இருந்தார்.
நாளை மந்திரிசபை மாற்றியமைப்பு?
இதற்கிடையில், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவுக்கு வந்துள்ளர். அவர், வருவதற்கு முன்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பா.ஜனதா தலைவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது மந்திரிசபை மாற்றியமைப்பு குறித்து 4 நாட்களில் தகவல் அனுப்புவதாக அமித்ஷா கூறி இருந்ததால், கட்சியின் மூத்த தலைவர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அமித்ஷா கூறி 4 நாட்கள் ஆகி விட்டதாலும், அதே நேரத்தில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும் பெங்களூருவுக்கு வந்திருப்பதாலும், கர்நாடக மந்திரிசபை நாளை(திங்கட்கிழமை) மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜனதா மேலிடத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேலிடத்தின் அனுமதிக்காக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை மற்றும் தலைவர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story