கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 1 லட்சம் எக்டேரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் 38 ஆயிரம் எக்டேர் பாசன வசதியுடனும், மீதமுள்ள 62 ஆயிரம் எக்டேர் மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 954 மில்லி மீட்டர் ஆகும். கோடை காலத்தில் சராசரியாக 83 மில்லி மீட்டர் மழையளவு பெறப்படுகிறது.
தற்போது மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்யலாம். கோடை உழவு செய்வதினால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகிறது. மண்ணானது ஈரமும், காய்ந்ததுமாக இருப்பதினால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்த வயலில், அங்கக மற்றும் தொழு உரம் இடுவதினால் மண்ணில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை பல்கி பெருகி மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது. களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது. கோடை மழை, வளி மண்டலத்திலுள்ள வளிமண்டல நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யும் போது, மண்ணில் உள்ள பூச்சிகள், கூட்டுப் புழுக்கள், அவற்றின் முட்டைகள், பூஞ்சாணம் மற்றும் நோய் பரப்பக்கூடிய பாக்டீரியாக்கள், நூல் புழுக்கள் ஆகியவை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.
மேலும் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய களைகள், அவற்றின் விதைகள் முழுவதுமாக மக்கி மண்ணுக்கு உரமாக மாற்றப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இத்தகைய பல்வேறு பயன்தரக்கூடிய கோடை உழவை அனைத்து விவசாயிகளும் தற்போது பெய்துள்ள மழையை மேற்கொள்ளுமாறும், இதற்காக வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட சம்பந்தப்பட்ட வேளாண் பொயிறியல் துறையின் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story