பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
குடும்பநல அறுவை சிகிச்சை
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
முதல் -அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற, ஆண் குழந்தையின்றி 2 பெண் குழந்தைகள் (2-வது குழந்தைக்கு 3-வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3-வயதுக்குள்) புதிதாக விண்ணப்பிக்கலாம். பெற்றோர்களில் ஒருவரில் 40 வயதுக்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கனவே இந்த திட்டத்தில் பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று 19 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்பந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதிக்குள் சம்பந்தபட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியாளர்களை அணுகலாம்.
முதலீட்டு பத்திரம்
மேலும் முதல்- அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தமிழக போக்குவரத்து வளர்ச்சி நிதிக்கழகத்தின் மூலம் 1992-1993 முதல் 2000-2001 வரை நிதி ஆண்டுகளில் வழங்கப்பட்ட முதலீட்டு பத்திரங்கள் அனைத்தும், 2 குழந்தை உள்ளவர்களுக்கு தலா ரூ.1,500-ம், ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் முதலீட்டு பத்திரங்களாக வழங்கப்பட்டன.
18 வயது பூர்த்தியான பெண் குழந்தைகளுக்கு அந்த பத்திரத்தின் முதிர்வு தொகையினை பெற்றுக்கொள்ள அரசாணை பெறப்பட்டு முதிர்வுத்தொகை பெறுவதற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த தொகையினை முழுமையாக பெற்றுக்கொண்டவர்கள் தவிர, விடுபட்ட ஒருசிலர் உள்ளனர்.
16-ந்தேதி கடைசி வாய்ப்பு
அவர்களுக்கு அந்த தொகையினை பெற்றுக்கொள்ள வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதி கடைசி வாய்ப்பாகும். சம்பந்தப்பட்ட குழந்தை எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்க வேண்டும். தங்களிடம் உள்ள முதலீட்டு பத்திரத்தின் அசல் அல்லது நகல், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்று, பெண் குழந்தையின் புகைப்படம், தாயார் புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியாணர்களை அணுகலாம். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story