தேவாலா பகுதியில் யானை வழித்தடங்களில் மின்வேலிகள் அகற்றும் பணி தொடக்கம்


தேவாலா பகுதியில் யானை வழித்தடங்களில் மின்வேலிகள் அகற்றும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 15 May 2022 5:00 PM IST (Updated: 15 May 2022 5:00 PM IST)
t-max-icont-min-icon

தேவாலா பகுதியில் காட்டு யானைகள் வழித்தடங்களில் உள்ள மின் வேலிகளை அகற்றும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.

கூடலூர்

தேவாலா பகுதியில் காட்டு யானைகள் வழித்தடங்களில் உள்ள மின் வேலிகளை அகற்றும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.

மின்வேலி அகற்றும் பணி

கூடலூர் பகுதியில் பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் ஊருக்குள் தினமும் வருகிறது. தொடர்ந்து வன விலங்கு- மனித மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட வன ஊழியர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இது தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது காட்டு யானைகள் நடந்து செல்லும் முக்கிய வழித்தடங்களில் சூரிய சக்தியில் செயல்படும் மின் வேலிகள் அதிகளவு பொருத்தப்பட்டு இருப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வன ஊழியர்கள் தேவாலா கைதக்கொல்லியில் தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியை வெட்டி அகற்றினர்.

பணி தொடரும்

இதுகுறித்து வனச்சரகர் ராம் குமார் கூறியதாவது:-
மனித- வன விலங்கு மோதல் ஏற்படாமல் இருக்கவும், யானைகள் பாதுகாப்பாக அதன் வழித்தடத்தில் செல்லவும் தனியார் தேயிலை தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சோலார் மின் வேலி அகற்றப்பட்டது. வேலியை அகற்றுவது சம்பந்தமாக தனியார் தேயிலை தோட்ட உரிமையாளருக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டது. மேலும் 2 முறை நோட்டீசும் வழங்கப்பட்டது.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் தேயிலை தோட்ட உரிமையாளர் எடுக்காத நிலையில் யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலி அகற்றப்பட்டது. காட்டு யானை வழித்தடத்தில் பொருத்தப்பட்ட மின்வெளி அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story