ஊட்டிக்கு தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
ஊட்டிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
கோத்தகிரி
ஊட்டிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருகிற 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக. அவர் கோவையிலிருந்து சாலை மார்க்கமாக ஊட்டிக்கு வரவுள்ளதாக தெரிகிறது.
இதையொட்டி சாலையோரங்களில் அபாயகரமான மரங்கள் உள்ளனவா? என கோத்தகிரி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் தீபக் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் கோத்தகிரி கட்டபெட்டு முதல் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை கிராமம் வரை ஆய்வு மேற்கொண்டனர்.
தூய்மை பணிகள் தீவிரம்
இதில் சாலையோரம் உள்ள பெரும்பாலான மரங்களின் கிளைகள் சாலையை ஆக்ரமித்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றவும், அபாயகரமான மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல முதல்-அமைச்சர் வருகையையொட்டி குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை கிராம ஊராட்சிகள் மூலம் மேட்டுப்பாளையம் சாலையில் அரவேனு முதல் குஞ்சப்பனை வரையுள்ள சாலையோரங்களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது.
சாலையோரங்களில் வளர்ந்திருந்த செடிகளும் வெட்டி அகற்றப்பட்டு, தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பிலும் நகரின் முக்கிய சாலைகளில் முழு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
Related Tags :
Next Story