நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது


நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2022 7:52 PM IST (Updated: 15 May 2022 7:52 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே நடகோட்டை பகுதியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை தனியார் சோலார் நிறுவனம் அமைத்து வருகிறது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஜஸ்டின் தலைமையில் கட்சியினர் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகம் நோக்கி திரண்டு வந்தனர். பின்னர் சோலார் பேனல் தொழிற்சாலை தொடர்பாக மக்களின் பிரச்சினை குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ. பேசாததை கண்டித்து நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதற்கிடையே போராட்டம் நடத்தப்போவது குறித்த அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் எம்.எல்.ஏ. அலுவலக பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story