எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளி அரசுக்குள்ளேயே இருக்கலாம்; பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் முக்கிய குற்றவாளி அரசுக்குள்ளேயே இருக்கலாம் என்று பிரியங்க் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கலபுரகி:
கலபுரகியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நம்பும்படியாக இல்லை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு சம்பந்தமாக பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பா.ஜனதா கட்சியின் பிரமுகரான திவ்யா காகரகி, ருத்ரே கவுடா பட்டீலை கைது செய்திருப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறி வருகிறார்.
சப்-இன்ஸ்பெ்க்டர் தேர்வின் முறைகேட்டின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்கள் திவ்யா காகரகி, ருத்ரேகவுடா பட்டீல் என்று அரசு கூறுவதை நம்பும்படியாக இல்லை. ஆனால் அவர்கள் தான் முக்கிய குற்றவாளிகள் என்றும், அவர்களை கைது செய்திருப்பதாகவும் அரசு பெருமையாக கூறி கொள்ளலாம். மாநில மக்களை நம்ப வைக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபடுகிறது.
அரசுக்குள்ளேயே இருக்கலாம்
உண்மையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் வேறு ஒரு முக்கிய நபர் இருக்கிறார். அவர் தான் முக்கிய குற்றவாளி ஆவார். அந்த முக்கிய குற்றவாளி அரசுக்குள்ளேயே இருக்கலாம். அவரை பற்றிய தகவல்கள் மூடி மறைக்கப்படுகிறது. என்றாவது ஒரு நாள் முக்கிய குற்றவாளி யார்? என்பது தெரியவரும். சி.ஐ.டி. விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதாக தெரியவில்லை.
ஏனெனில் பணம் கைமாறி இருப்பதாக சொல்கிறார்கள். அந்த பணம் எப்படி கைமாறியது, எங்கு வைத்து பணம் பெறப்பட்டது என்ற எந்த தகவலையும் சி.ஐ.டி. போலீசார் இதுவரை வெளியிட வில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நியாயமாக நடக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story