சித்திரை மாத பிரம்மோற்சவ விழா: வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீர்த்தவாரி


சித்திரை மாத பிரம்மோற்சவ விழா: வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 15 May 2022 9:25 PM IST (Updated: 15 May 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சந்திர பிரபை வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த 12-ந் தேதியன்று திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 10.30 மணி அளவில் கோவில் அருகே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். தீர்த்தவாரி கண்டு களித்த உடன் பொதுமக்கள் கோவில் குளத்தில் குளித்து புனித நீராடினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் கடைசி நாளான 10-ம் நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்ணாடி பல்லக்கு உற்சவமும், திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

Next Story