கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வார வேண்டும்


கீழ்பவானி பாசன கால்வாயை   தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 15 May 2022 9:26 PM IST (Updated: 15 May 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வார வேண்டும்

முத்தூர்:
கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள்
ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
 முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டியில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மங்களப்பட்டி சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் குட்டப்பாளையம் கார்த்திகேய சிவசேனாபதி, தமிழக கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பவானிசாகர் அணை முதல் கடைமடை பகுதிவரை கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்கள்.
நஞ்சை சம்பா நெல் சாகுபடி
பவானிசாகர் அணையில்  இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக கால்வாய்கள் மூலம் கீழ்பவானி பாசன பகுதிகளில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி  நஞ்சை சம்பா நெல், எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறி பயிர்கள், கீரை வகைகள் சாகுபடி செய்து பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு  நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. ஆனால் கீழ்பவானி பாசன திட்டம் ஓர் மழை நீர் அறுவடை மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ஆகும். கீழ்பவானி பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் மழை நீர் நிலத்தடி நீர் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் நோக்கம் பாழ் பட்டு போகும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு
 கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க முயற்சி செய்தால் கால்வாயின் இருபுறமும் உள்ள  4 லட்சம் மரங்கள் வெட்டப்படும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.  மேலும் பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடக் கூடிய நீர் கடலில் வீணாக வடிவதில்லை. இந்த நீர் கால்வாயின் இருபுறமும் உள்ள பலதரப்பட்ட பாசனங்களுக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் உபரி நீராக பயன்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி வீராணம் ஏரிக்கும் சென்று சென்னைக்கும் கூட குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. எனவே பவானிசாகர் அணை முதல் கடைமடை பகுதி வரை கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தற்போதைய தமிழக அரசு உடனடியாக கைவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கீழ்பவானி பாசன கால்வாயின் உள்ளே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நன்கு தூர் வாரி கரைகளை பலப்படுத்தினால் பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதி வரை எவ்வித தங்கு தடையின்றி சீரான முறையில் தண்ணீர் செல்லும். எனவே தமிழக அரசு கீழ்பவானி பாசன கால்வாயை உடனடியாக தூர்வார துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடுவதற்கு பணிகளை தொடங்கினால் , கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து அறவழியில் உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கீழ்பவானி பாசன சங்க செயலாளர் ஏ.கே. சுப்பிரமணியம், தமிழக இயற்கை வாழ்வுரிமை இயக்க தலைவர் மே.கு.பொடாரன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.முருகேசன் நன்றி கூறினார்.

Next Story