மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை- மகன் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை- மகன் பலி
x
தினத்தந்தி 15 May 2022 9:29 PM IST (Updated: 15 May 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

மானூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.

மானூர்:
மானூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர். 

வெல்டிங் பட்டறை உரிமையாளர்
நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் சுரேஷ் (வயது 35). இவர் மானூர் வடபுறத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி மாயா. இவர்களுக்கு சுஜி (8) என்ற மகளும், விஜயகுமார் (7) என்ற மகனும் உண்டு. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சுஜி 3-ம் வகுப்பும், விஜயகுமார் 2-ம் வகுப்பும் படித்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
நேற்று மதியம் சுரேஷ் தன்னுடைய மகன் விஜயகுமார், மகள் சுஜி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தனது வெல்டிங் பட்டறைக்கு புறப்பட்டு சென்றார். மானூர் பல்லிக்கோட்டை கால்வாயின் வடபுறம் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குழந்தைகள் விஜயகுமார், சுஜி ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுவன் பரிதாப சாவு
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த விஜயகுமார், சுஜி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் விஜயகுமார் பரிதாபமாக இறந்தான். சுஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த சுரேஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்து நிகழ்ந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, தலைமறைவான டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story