மூட்டைமூட்டையாக குப்பையில் கொட்டப்பட்ட சின்னவெங்காயம்


மூட்டைமூட்டையாக குப்பையில் கொட்டப்பட்ட சின்னவெங்காயம்
x
தினத்தந்தி 15 May 2022 9:53 PM IST (Updated: 15 May 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

மூட்டைமூட்டையாக குப்பையில் கொட்டப்பட்ட சின்னவெங்காயம்

போடிப்பட்டி:
உடுமலை பகுதியில் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மூட்டை,மூட்டையாக குப்பையில் கொட்டப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.
நீர்ப்பாசன முறை
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம்பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இங்கு அனைத்து விதமான காய்கறிகளும் சாகுபடி செய்யப்பட்டாலும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பிட்ட பருவம் என்று இல்லாமல் நீர்ப்பாசன முறையில் ஆண்டு முழுவதும் இவற்றை சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் ஆண்டுதோறும் தக்காளி, வெங்காயம் கடும் விலை சரிவை சந்தித்துவிவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தக்காளி கிலோ ரூ.5- க்கும் குறைவாக விற்பனையாகி விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் பல விவசாயிகள்தக்காளி பழங்களுடன் தோட்டத்தை டிராக்டர் விட்டு அழித்தனர். அத்துடன் மழை மற்றும் பூச்சி நோய் தாக்குதலால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.இதனால் தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளது.
மகசூல் குறைவு
அதேநேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது.இதனால் மன வேதனையடைந்த சில விவசாயிகள் மூட்டை,மூட்டையாக சின்ன வெங்காயங்களை சாலையோரம் குப்பையாக வீசிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
தற்போது சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விதை, உரம், பூச்சி மருந்து, கூலி என அதிக அளவில் செலவு செய்ய வேண்டியதுள்ளது. அந்தவகையில் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் இடையில் ஏற்பட்ட மழைப்பொழிவால் மகசூல் பாதியளவாகக் குறைந்துள்ளது. அத்துடன் மழையால் பல விளைநிலங்களில் தற்போது அறுவடை செய்யும் சின்ன வெங்காயம் இருப்பு வைப்பதற்கு உகந்ததாக இல்லை. இதனால் வந்த விலைக்கு விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கிறார்கள்.
அரசு நடவடிக்கை
தரத்தைப் பொறுத்து தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.5 முதல் ரூ.10 வரையே கொள்முதல் செய்யப்படுகிறது. அதிலும் சற்று தரம் குறைவான சிறிய ரக சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்யவே யாரும் முன்வராத நிலை ஏற்படுகிறது. இதனால் மூட்டை,மூட்டையாக சின்ன வெங்காயத்தை சாலையோரங்களில் வீசியெறியும் அவலம் உண்டாகிறது. சின்ன வெங்காய சாகுபடியைப் பொறுத்தவரை அடிச்சா  ஜாக்பாட், விழுந்தா ஆள் அவுட் என்பது போன்ற நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. 
சில நேரங்களில் உச்சம் தொட்டு ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனையாவதும், சில நேரங்களில் விலை வீழ்ந்து கிலோ ரூ.5-க்கும் குறைவாக விற்பனையாவதும் நடக்கிறது. சூதாட்டம் போன்ற இந்த நிலைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சாகுபடி பரப்பை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தவும், விளைபொருளுக்கு நிலையான விலை கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற அவலம் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story