வெள்ளிவிழா பூங்காவில் பராமரிப்பில்லாத விளையாட்டு சாதனங்கள்


வெள்ளிவிழா பூங்காவில் பராமரிப்பில்லாத விளையாட்டு சாதனங்கள்
x

வெள்ளிவிழா பூங்காவில் பராமரிப்பில்லாத விளையாட்டு சாதனங்கள்

அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் பராமரிப்பின்றி காணப்படும் விளையாட்டு சாதனங்களால் எப்போது சீரமைக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
பொழுதுபோக்கு அம்சம்
தொழில் நகரமான திருப்பூரில் பொழுதுபோக்கு அம்சம் என்று சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் எதுவும் இல்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாரம் முழுவதும் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து, ஒருநாள் விடுமுறையில் பொழுதை கழிக்க வேண்டுமென்றால் அதற்கான இடங்கள் திருப்பூரில் இல்லை. 
சினிமா தியேட்டர்களும், மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா மட்டுமே திருப்பூர் மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வசதி படைத்தவர்கள் அண்டை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் விரும்பி செல்வதும், அவர்களுக்கு ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் தருவது திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா மட்டுமே.
பழுதடைந்த சாதனங்கள்
 குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதலே பூங்காவில் மக்கள் கூட்டம் களை கட்ட தொடங்கி விடும். மாலை நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். குறிப்பாக வடமாநில இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வெள்ளி விழா பூங்கா வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆனால் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம் என்ற எண்ணத்துடன் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவிற்கு செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

 அங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது. அங்கு சிறுவர்கள் விளையாடும் டேசிங் கார்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று செயல்படாமல் உள்ளது. அதில் உள்ள தண்ணீர் மாற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. 
மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
இதேபோல் பூங்காவில் உள்ள வண்ண மீன்கள் தொட்டியும் பார்வையாளர்கள் பார்க்க முடியாத நிலையிலேயே உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது விளையாட்டு சாதனங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மீண்டும் யாருக்கும் பயனற்ற நிலையில் இருப்பது பொதுமக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. 

எனவே மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் பழுதடைந்த நிலையில் உள்ள விளையாட்டு சாதனங்களை உடனடியாக சரி செய்யவும், செயல்படாமல் உள்ள சில பொழுதுபோக்கு அம்சங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், பூங்காவை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story