கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை வேலைநிறுத்தம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 10:39 PM IST (Updated: 15 May 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

கரூர், 
வேலைநிறுத்தம்
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் ஓனர் அசோசியேஷன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள். 
இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் வினியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக சுமார் 2½ லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ரூ.100 கோடி உற்பத்தி இழப்பு
இந்த உற்பத்தி நிறுத்தத்தின் காரணமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான அளவில் ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்படும். கரூரில் இருக்கக்கூடிய ஜவுளி சார்ந்த அனைத்து அமைப்புகளின் நிர்வாகக் குழுவினர் ஒன்றுகூடி மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியிடம் நூல் விலை ஏற்றத்தின் காரணமாக ஜவுளித்தொழிலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி, தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மத்திய அரசிற்கு நூல் விலையை குறைக்க ஆவன செய்ய வலியுறுத்துமாறு கோரிக்கை மனு வழங்க உள்ளனர். 
தொடர்ந்து, இதே கருத்தை வலியுறுத்தி மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து கோரிக்கை மனு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

Next Story