தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.
கால்வாய் அடைப்பால் குளமாக தேங்கிய மழைநீர்
ஆரணி நகரிலும் சுற்றுவட்டாரத்தில் நேற்றுமுன்தினம் திடீரென மாலை கன மழை கொட்டித் தீர்த்தது. ஆரணி அருணகிரிசத்திரம் காண்ட்ராக்டர் பொன்னுசாமி தெருவில் போதிய பக்க கால்வாய்கள் இல்லாததாலும் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய் அடைப்புகளை சரிவர அகற்றாததாலும் மழைநீர் குளம்போல் சாலையில் தேங்கியது. தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி விட்டன. கால்வாய் அடைப்பை சரி செய்து கழிவுநீர் சீராக செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-ராகவன், ஆரணி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது வடபுதுப்பட்டு பகுதி. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் அதிகமாக கிடக்கிறது. குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, ஆம்பூர்.
நாய் தொல்லை
ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவில் அரசு வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு நாய் 5 குட்டிகளை ஈன்றது. அந்த நாய் தனது குட்டிகளுடன் அங்கேயே தஞ்சமடைந்துள்ளது. பணம் எடுக்க வருேவார் உள்ளே ெசன்றால், தனது குட்டிகளை எடுக்க வருகிறார் என நினைத்து கடிக்க பாய்கிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். குட்டிகளுடன் உள்ள நாயை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
-வாமனன், ஜோலார்பேட்டை.
சுகாதார சீர்கேடு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தர்மராஜா கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைப்பந்து பயிற்சிக்காக வலை அமைத்து விளையாடுகின்றனர். ஆனால் அங்குள்ள சிலர் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை அங்கு வந்து கட்டி அசுத்தம் செய்கிறார்கள். சாணம், குப்பைகளை கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, அக்ராபாளையம்.
போக்குவரத்து நெரிசல்
பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதி நான்கு கம்பம் சந்திப்பு. இந்தப் பகுதியில் பள்ளி மாணவர்களும், பஜார் வீதிக்கு செல்வோரும் இருசக்கிர வாகனங்கள், பஸ்கள், தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் அந்தப் பகுதியை கடந்து செல்ல வேண்டும். காலை, மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த நெரிசலை போக்க மாற்று வழியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர ேவண்டும்.
-ம.கீர்த்திகா, பேரணாம்பட்டு.
சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்
வேலூர் சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் விபத்துகள் நடக்காமல் இருக்க அப்பகுதி பொதுமக்கள் பள்ளத்தைச் சுற்றிலும் செங்கற்கள் வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
மதுப்பிரியர்கள் அட்டூழியம்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தில் மதுப்பிரியர்கள் மதுபானத்தை குடித்து விட்டு காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். அங்கு கழிப்பிடம் செல்வதும் நடந்து வருகிறது. இரவில் அந்தக் கட்டிடத்தில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வரதராஜன், தூசி.
போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆரணி புதிய பஸ் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் மூங்கிலாலான தட்டியை கட்டி மறைப்பாக வைத்துள்ளனர். அந்த இடத்தை மதுபான பாராக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அருகில் புறக்காவல் நிலையம் இருந்தும் போலீசார் கண்டுகொள்ளாத அவலநிலை உள்ளது. இரவில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து அங்கு வைத்து குடிக்கிறார்கள். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-பத்மாவதி, ஆரணி.
Related Tags :
Next Story