புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு: 2,232 காளைகள் சீறிப்பாய்ந்தன; வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் 50 பேர் காயம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு: 2,232 காளைகள் சீறிப்பாய்ந்தன; வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் 50 பேர் காயம்
x
தினத்தந்தி 15 May 2022 11:36 PM IST (Updated: 15 May 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 2,232 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் காளைகளை போட்டிபோட்டு அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை ஓட்டக்குளத்தில் ஸ்ரீ காரண செல்ல அய்யனார், ஸ்ரீ செல்லாயி அம்மன் கோவிலில் 130-வது ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா கடந்த 13-ந் தேதி நடைபெற்றது. விழாவை தொடர்ந்து ஜல்லிக்கட்டு கோவில் அருகே இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டினை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 
அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் காளைகள் ஒவ்வொன்றாக வரிசையாக டோக்கன் அடிப்படையில் அவிழ்த்துவிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 776 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். மாடுபிடி வீரர்கள் பகுதி, பகுதியாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
15 பேர் காயம்
களத்தில் சில காளைகள் காளையர்களிடம் பிடிபடாமல் ஆட்டம் காட்டின. அதனை அடக்க முயன்றவர்களை கொம்பால் தூக்கி வீசியது. மேலும் காலால் எட்டி உதைத்தது. சில காளைகளை வீரர்களும் துணிந்து திமிலை பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்கள் பிடியில் சிக்காத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும் மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 
காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. காளைகள், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஓட்டக்குளம் ஆயக்கட்டுதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 
பொன்னமராவதி 
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற 756 காளைகளை, 250 மாடுபிடி வீரர்கள் போட்டுப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றது. காளைகள் முட்டி தள்ளியதில் 20 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க, வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே கோவில்பட்டி சக்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்து கொண்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டுப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் மின்னல் வேகத்தில் சென்றன. காளைகள் முட்டி தள்ளியதில் 15 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க, வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story