தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி


தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி புனித சவேரியார் பேராலயத்தில்  சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 15 May 2022 11:50 PM IST (Updated: 15 May 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

வாடிகனில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, அவருடைய கல்லறை அமைந்துள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டார்.

நாகர்கோவில், 
வாடிகனில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, அவருடைய கல்லறை அமைந்துள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டார்.
புனிதர் பட்டம்
குமரி மண்ணில் பிறந்து, வளர்ந்து, கிறிஸ்தவத்துக்காக மறைசாட்சியாக மடிந்தவர் தேவசகாயம். அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக ஆயர் மன்றம் சார்பிலும், கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆயர்கள் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ரோமில் உள்ள புனிதர் பட்ட பேராயத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து திருச்சபையின் பல்வேறு ஆய்வுகளுக்குப்பிறகு அவர் புனிதராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதையொட்டி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் முன்னேற்பாட்டு திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு திருப்பலி
நேற்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி காலையில் தேவசகாயம் கல்லறை அமைந்துள்ள நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தேவசகாயத்துக்கான புனிதர் பட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று இந்த திருப்பலியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
 திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கினார். புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை பிராங்கோ சிலுவை, அருட்பணியாளர் அமலநாதன் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
மலர் தூவி அஞ்சலி
திருப்பலி முடிவில் பேராலய பலிபீடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள புனித தேவசகாயம் கல்லறைக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் நகரில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், புனிதர் தேவசகாயம் சுட்டுக்கொல்லப்பட்ட தேவசகாய மவுண்டில் உள்ள ஆலயம், நட்டாலம், புலியூர்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் நடந்த நிகழ்ச்சியில் ரோமில் தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் (இந்திய நேரம் 1.30 மணி) தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை நிர்வாகிகள் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் கிரீடத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.அந்த கிரீடத்தை மேடையில் வைக்கப்பட்டிருந்த புனிதர் தேவசகாயம் சொரூபத்திற்கு சூட்டினர். இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story