வடசேரி பஸ் நிலையத்தில் சிறுவன் மயங்கி விழுந்து சாவு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நண்பர்கள் கண் முன்பு சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நண்பர்கள் கண் முன்பு சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
உறவினர் வீட்டுக்கு வந்தவர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 3 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி முழுவதும் சுற்றிப்பார்த்துவிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்ல இருந்தனர்.
அப்போது திடீரென விக்னேசின் உடல்நிலை மேசமானதாக தெரிகிறது. இதனால் அவர் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரி சிகிச்சையில் இருந்த விக்னேசின் உடல்நிலை சற்று குணமடைந்ததாக கூறப்படுகிறது.
மயங்கி விழுந்து சாவு
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விக்னேசும் அவரது நண்பர்களும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்த போது திடீரென விக்னேசுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.
உடனே சக பயணிகள் மற்றும் நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story