கட்டுக்கட்டாக சிக்கிய போலி ரூபாய் நோட்டுகள்
வத்திராயிருப்பு பகுதியில் போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்ற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்ற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரட்டிப்பு பரிமாற்றம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை - சேதுநாராயணபுரம் விலக்கு பகுதியில் கேரளாவை சேர்ந்த சஜித்குமார்(வயது45), கூடலூரை சேர்ந்த கனகசுந்தரம் (55), திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த மணி (35), கொடைக்கானல் பகுதியை சேர்ந்த செல்வம் (38) ஆகியோர் சினிமா படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் ரூ.67.87 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களை காரில் கொண்டு வந்தனர்.
இவர்கள், கூமாப்பட்டி கொடிக்குளத்தை சேர்ந்த பூமிராஜ்(30), அவரது நண்பர்கள் பாலமுருகன்(30), குபேந்திரன்(28), வினோத்(35), ராஜா(35) உள்ளிட்டோரிடம் பணம் இரட்டிப்பு பரிமாற்றம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
5 பேர் கைது
அப்போது கேரளாவை சேர்ந்த சஜித்குமார், கூமாபட்டி கொடிக்குளத்தை சேர்ந்த பூமிராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வத்திராயிருப்பு போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுக்களை, அசல் ரூபாய் நோட்டுகளுடன் கலந்து மக்களை ஏமாற்றி புழக்கத்தில் விட திட்டமிட்டது தெரியவந்தது.
அதையடுத்து சஜித்குமார், கனகசுந்தரம், பூமிராஜ், குபேந்திரன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைதான 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்.
பரபரப்பு
மேலும், அவர்களிடம் இருந்த ரூ.36,500 மற்றும் 67.87 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தப்பியோடிய செல்வம், தாண்டிக்குடி மணி, கூமாபட்டி வினோத், ராமசாமியாபுரம் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story