பெரம்பலூரில் நுங்கு விற்பனை அமோகம்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பெரம்பலூரில் நுங்கு விற்பனை அமோகமாக இருக்கிறது.
பெரம்பலூர்,
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், மதிய நேரங்களில் வெளியில் செல்பவர்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும், இளைஞர்கள் தொப்பி அணிந்தும் சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 97.1 டிகிரி வெயில் கொளுத்தியது.
நுங்கு விற்பனை அமோகம்
வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ள பொதுமக்கள் குளிர்பானங்கள், மோர், பழரசம், இளநீர் வாங்கி அருந்துகின்றனர். இதனால், இந்த கடைகளில் கூட்டம் அதிகரிப்பதுடன் விற்பனையும் அமோகமாக இருக்கிறது. இதேபோல, வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்கும் நுங்கு விற்பனையும் அமோகமாக இருக்கிறது. பெரம்பலூர் நகர்பகுதிகளில் சங்குப்பேட்டை உள்ளிட்ட சாலையோரங்களில் நிறைய வியாபாரிகள் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதில், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் பொதுமக்கள் நுங்கு வியாபாரிகளை தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.
5 நுங்கு ரூ.20-க்கு விற்பனை
இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், காலை 10 மணிக்கு கடை விரித்தால் மதியம் 2 மணிக்குள் நுங்குகள் அனைத்தும் விற்று தீர்ந்து விடுகிறது. பனை மரங்களை குத்தகைக்கு எடுத்தல், நுங்கு வெட்டுதல், விற்பனைக்காக மினி சரக்கு வாகனங்களில் எடுத்து வருதல் என செலவு அதிகளவில் உள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட 5 நுங்கு ரூ.20-க்கு விற்கிறோம். இந்த மாதம் முழுவதும் நுங்கு விற்பனை இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story