‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 May 2022 8:54 PM GMT (Updated: 15 May 2022 8:54 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி 6-ம் நம்பர் ரோடு ஆத்தியடி தெரு பின்புறத்தில் உள்ள வேப்ப மரம் பட்டுப்போன நிலையில், எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது என்று ஆறுமுகம் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்
நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. நெல்லையில் இருந்து இந்த வழியாகத்தான் தென்காசி, கடையம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் வாகனங்களில் செல்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-ஜெய்னுல் ஆபிதீன், நெல்லை டவுன்.

அடிப்படை வசதிகள் தேவை
மானூர் தாலுகா வடக்கு செழியநல்லூர் பஞ்சாயத்து கீழ செழியநல்லூர் கிராமத்தில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ராஜேஷ்குமார், கீழ செழியநல்லூர்.

ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்டப்படுமா?
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து தோமையார்புரத்தில் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சேதமடைந்த அங்கன்வாடி மையம்
மானூர் தாலுகா வெள்ளப்பனேரி பஞ்சாயத்து தெற்கு பூலாங்குளம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆகையால் அங்குள்ள வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. எனவே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-தங்கராஜ், தெற்கு பூலாங்குளம்.

கவனிப்பாரற்ற பெயர் பலகை
தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெயர் பலகையானது பெயர்ந்து சாலையோரம் கவனிப்பாரற்று பல மாதங்களாக கிடக்கிறது. எனவே அங்கு ஊர் பெயர் பலகையை மீண்டும் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-அம்ஜத், முதலியார்பட்டி.

குண்டும் குழியுமான சாலை
கீழ கடையம் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்று வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

தெருவில் குவிந்த குப்பைகள்
ஆலங்குளம் அருகே ஊத்துமலை 14-வது வார்டு பழைய வி.எம்.தெருவில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு மலைபோன்று குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகள் வைக்கவும், குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தினமும் அகற்றவும் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-சாகுல் ஹமீது, ஊத்துமலை.

காட்சிப்பொருளான பஸ் நிலையம்
கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்களும் செல்லாமல், நாற்கர சாலையோரம் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கூடுதல் பஸ் நிலையம் பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் இரவில் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி நகரில் உள்ள அண்ணா பஸ் நிலையத்துக்கு சர்குலர் பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் செல்லும் நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லவும், இரவில் சர்குலர் பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-பாலமுருகன், கோவில்பட்டி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
உடன்குடி அருகே வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து கலியன்விளையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகள் உயர்வாக செல்லும் வகையில் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-செந்தில்குமார், கலியன்விளை.

Next Story