ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு 4 மணி நேரத்தில் சீரமைப்பு; போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி-கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை 4 மணி நேரத்தில் சீரமைத்து, போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணியை கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
ஏற்காடு:
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை 4 மணி நேரத்தில் சீரமைத்து, போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணியை கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
மண்சரிவு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கட்நத சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் பெய்ய ஆரம்பித்த மழையானது நள்ளிரவு வரையிலும் நீடித்தது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 40 அடி பாலத்திற்கும், 60 அடி பாலத்திற்கும் இடையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இதேபோல், 5 மற்றும் 6-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் மண் மற்றும் கற்கள் ஆங்காங்கே கிடந்தன. இதன் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 மணி நேரத்தில் சீரமைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மற்றும் ஏற்காடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சாலையில் கிடந்த மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி சீரமைக்கப்பட்டது. இதனால் வழக்கம்போல் நேற்று காலை மீண்டும் ஏற்காட்டிற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே, மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று காலை ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மண்சரிவு குறித்தும் அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ஏற்காடு மலைப்பாதை முழுவதும் நிரந்தரமாக மண்சரிவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளிடம், கூடுதலாக என்ன என்ன வசதிகள் தேவை? என்பது குறித்து கேட்டறிந்தார்.
பேட்டி
இதைத்தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு இரவோடு இரவாக சரி செய்யப்பட்டுவிட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து இரவில் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மண்சரிவு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்காட்டிற்கு மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு
படகு இல்லம், அண்ணா பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய அளவில் குடிநீர் வசதிகள், குப்பை தொட்டிகள், கழிப்பிட வசதிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை சுற்றுலா பயணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி ஏற்காடு கோடை விழா வருகிற 26-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை திட்டமிட்டப்படி நடைபெறும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.