கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி விவகாரங்களில் சட்டப்படியே தீர்வு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி விவகாரங்களில் சட்டப்படியே தீர்வு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 16 May 2022 2:54 AM IST (Updated: 16 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி விவகாரங்களில் சட்டப்படியே தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி:

  உப்பள்ளி விமான நிலையத்தில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நேர்மையான ஆட்சி

  கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி விவகாரங்களில் மக்களின் அமைதியை கெடுக்கும் முயற்சிகள் நடந்தது. இந்த விவகாரங்களை சட்டத்தின் படியே, கோர்ட்டுகளில் எந்த மாதிரியான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அரசும் தீர்வு கண்டுள்ளது. இந்த விவகாரங்களில் அரசு மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வந்தது.

  ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளின் தீர்ப்புகளின்படியும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும், நியாயமான முறையில் ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு தீர்வு கண்டு உள்ளது. இந்த விவகாரங்களில் நல்லிணக்க அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனெனில் நேர்மையான முறையிலும், மக்களுக்காக ஆட்சியை நடத்துவது மிகவும் முக்கியமாகும். அதனை தான் தற்போது பா.ஜனதா அரசு செய்து வருகிறது.

விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி...

  மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தொலைபேசி மூலமாக மேலிட தலைவர்களுடன் பேச முடிவு செய்துள்ளேன். அவர்களது அனுமதியின் பெயரில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவை, கர்நாடக மேல்-சபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

  விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்குவதற்காக, அவருக்கு கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர் பதவி வழங்க இருப்பது பற்றி கேட்கிறீர்கள். விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதா மேலிடம் தான் முடிவு செய்யும். அதுபற்றி நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story