‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 16 May 2022 3:00 AM IST (Updated: 16 May 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சங்கராபுரம் ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை நிலவுகிறது. இதனால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், சங்கராபுரம்.

ேபாக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் அப்பல்லோ ஆஸ்பத்திரி சிக்னல், முனிச்சாலை சிக்னல் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் வாகனஒட்டிகள் வாகனங்களை வேகமாக இயக்குகிறார்கள். இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே  அதிகாரிகள் இந்த பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும்.
ஜெய், முனிச்சாலை.
ஒளிராத உயர்கோபுரவிளக்கு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கன்னிராஜபுரம் ரோச்மா நகரில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் கடந்த சிலநாட்களாக எரியாமல் உள்ளன. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த விளக்குகளின் வெளிச்சத்தை கொண்டுதான் மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருவர். இந்தநிலையில் எரியாத விளக்குகளால் மீனவர்கள், இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எரியாத விளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகளை அமைக்க வேண்டும்.
டேவிட், கன்னிராஜபுரம்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குன்னூர் பஞ்சாயத்து கிருஷ்ணன் கோவில் மற்றும் போக்குவரத்து நகர் 6-வது தெரு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையால் வாகன ஒட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகிறார்கள். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் வர சிரமப்படுகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் நேரவிரயத்தாலும் அவதியடைகின்றனா். எனவே குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய வேண்டும்.
கேசவன், வத்திராயிருப்பு.

கழிவுநீர் கால்வாய் தேவை 

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி 2,3 மற்றும் 7-வது வார்டுகளில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீரானது சாலையிலேயே தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
சாம்ராட், பரவை.

 பெயர்பலகை வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம்-காரைக்குடி சாலை விரிவாக்கப்பணியின் போது  அங்குள்ள பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஆர்.எஸ்.மங்கலம் பெயர் பலகை அகற்றப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற பிறகு மீண்டும் பெயர் பலகை அதே இடத்தில் அமைக்கப்படவில்லை.  இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகனஒட்டிகள் பெயர்பலகை இல்லாததால் வழிமாறுகிறார்கள். நேரவிரயத்தாலும், அலைச்சலாலும் சிரமப்படும் வாகனஒட்டிகளின் சிரமம் கருதி இங்கு பெயர்பலகை அமைக்க வேண்டும்.
காதர் மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.

வேகத்தடை அமைக்கப்படுமா?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எதிரில் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதலால் பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் குறுகலான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த பாதையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் இந்தபகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக வடபழஞ்சி விலக்கு நிறுத்தத்தில் பொதுமக்கள் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் தேவையான இடங்களில் ேவகத்தடை அமைக்க வேண்டும் அல்லது எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பாண்டியராஜன், பல்கலைக்கழகநகர்.

ஆபத்தான மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பனைக்குளம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மின்கம்பம் கடற்கரை மணல் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த மின்கம்பமானது துருப்பிடித்து அரித்த நிலையில் சேதமடைந்துள்ளது. துருப்பிடித்த மின்கம்பத்தால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் ஆபத்தான இந்த மின்கம்பத்தை சுற்றியுள்ள மணலை அப்புறப்படுத்தி சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
பாரூக் உசேன், பனைக்குளம்.

Next Story