கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு


கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 16 May 2022 3:07 AM IST (Updated: 16 May 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளை உற்சாகமாக வரவேற்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பெங்களூரு:
  
முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு

  கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் சரியாக கல்வி கற்க முடியாத நிலை உண்டானது. ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மாணவர்களின் கல்வியும் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தாலும், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் வகையிலும் 2022-23-ம் கல்வி ஆண்டில் பள்ளிகளை முன்கூட்டியே திறக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.

  வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தான் பள்ளிகள் திறக்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் 16-ந் தேதியே (அதாவது இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் தற்போது பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் கோடை மழை பெய்ய தொடங்கியதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

உற்சாகமாக வரவேற்க உத்தரவு

  இந்த நிலையில், கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வகுப்பறைகள், பிற பகுதிகள், வளாகங்கள், கழிப்பறையை சுத்தம் செய்து வைத்திருக்கும்படி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பள்ளிகளில் கடந்த சில நாட்களாக தூய்மை பணிகள் நடைபெற்றது.

  அதே நேரத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அதாவது முதல் நாளான இன்று பள்ளிகள் முன்பு தோரணைகள், பூக்கள் கட்டியும் பள்ளிகள் அழகாகவும், திருவிழா போலவும் காட்சி அளிக்கும்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

31-ந் தேதி வரை ஆய்வு

  இதையடுத்து, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளை இன்று உற்சாகமாக வரவேற்க ஆசிரியர்கள் தயாராகி உள்ளனா். அதே நேரத்தில் பள்ளிகளுக்கு பெற்றோரை வரவழைப்பது, முன்னாள் மாணவர்களை அழைத்து வந்து மாணவா்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் வகையில் சில நிமிடங்கள் பேச வைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் பள்ளிகள் தயாராகி வருகின்றன.

  மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவாகளின் வருகை பதிவு, பள்ளிகள் சுத்தமாக உள்ளதா?, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பசவராஜ் பொம்மை திறந்து...

  இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி துமகூரு மாவட்டம் திப்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு நேற்று காலையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் சென்றார். அங்கு பள்ளி திறப்பையொட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு நடத்தினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுவை நட்டு வைத்தார்.

  அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி, துமகூரு மாவட்டத்தில் உள்ள எம்பிரஸ் பப்ளிக் பள்ளிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மதியம் 12.30 மணியளவில் செல்கிறார். பின்னர் அவர், 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளியை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி பி.சி.நாகேசும் கலந்து கொள்ள உள்ளார்.

கல்வி திறனை அதிகரிக்கும் திட்டம்

  அந்த பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்க இருக்கிறார். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாததால், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் வகையில் கற்கும் திறனை அதிகரித்தல் என்ற திட்டத்தையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க இருக்கிறார்.
  
பள்ளிகள் திறப்பையொட்டி இன்று முதலே மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு பஸ்களில் வரும் மாணவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பழைய பஸ் பாஸ் மூலமாகவே அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கூடிய விரைவில் புதிய பஸ் பாஸ் எடுப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.

Next Story