கணபதிபாளையம் நால்ரோடு அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை


கணபதிபாளையம் நால்ரோடு அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 3:09 AM IST (Updated: 16 May 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

கணபதிபாளையம் நால்ரோடு அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

ஊஞ்சலூர்,
கணபதிபாளையம் நால்ரோடு அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர்
திருச்சி காமராஜ் நகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 44). அவருடைய மகன் தமிழ்செல்வன் (21). இவர் கடந்த 2 மாதங்களாக ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் நால்ரோடு அருகே பெரிய வெத்திபாளையத்தில் உள்ள தனது அத்தை ஜெயந்தினி என்பவர் வீட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்தார்.
தமிழ்செல்வன் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் வீட்டில் இருந்து யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு சென்றார். ஆனால் மாலை 4 மணி வரை அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
உடல் மீட்பு
இதனால் உறவினர்கள் அவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். அப்போது ஜெயந்தினி வீடு அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்று மேட்டில் தமிழ்செல்வனின் சட்டையும், செல்போனும் இருந்துள்ளது.
கிணற்றை எட்டி பார்த்தபோது தமிழ்செல்வன் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். உடனே இதுபற்றி மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தமிழ்செல்வனின் உடலை மீட்டனர்.
தற்கொலை
இதுபற்றி அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தமிழ்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘தமிழ்செல்வன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story