ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கட்டிட மேஸ்திரி
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 3-வது வீதியை சேர்ந்தவர் முனுசாமி. கட்டிட மேஸ்திரி. இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை முனுசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முனுசாமி இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பணம், வெள்ளித்தட்டு திருட்டு
விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதேபோல் மூலப்பாளையம் விநாயகர் கோவில் 3-வது வீதியை சேர்ந்தவர் துரைராஜ். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர். இவரும் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளித்தட்டு உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்று உள்ளனர். மேலும் துரைராஜ் வீட்டின் கீழே உள்ள வீட்டில் போடப்பட்டு இருந்த 2 பூட்டில் ஒரு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
தீவிர ரோந்து
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 7-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் அதே நாளில் 9-வது வீதியில் தபால் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையும், ரூ.15 ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலப்பாளையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story