வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா
வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. வைணவ தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு, பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சியளிக்கிறார். இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அவர் அள்ளித் தருவதாக நம்பிக்கை. மேலும் பிரகலாத ஷேத்திரம், அரையருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா மற்றும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 13-ந் தேதி துவஜாரோகணத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனங்களில் வேதநாராயண பெருமாள் உபயநாச்சியாருடன் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி காலை 8 மணியளவில் தொடங்கி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் அமரநாதன் மற்றும் ஊர் பொதுமக்களும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.