‘பாட்டாளி மாடல் ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான்’-ஓமலூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


‘பாட்டாளி மாடல் ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான்’-ஓமலூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 16 May 2022 5:09 AM IST (Updated: 16 May 2022 5:09 AM IST)
t-max-icont-min-icon

பாட்டாளி மாடல் ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான் என்று ஓமலூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

ஓமலூர்:

பாட்டாளி மாடல் ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான் என்று ஓமலூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பொதுக்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று ஓமலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம், தெற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் தற்போது பா.ம.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சி அமைக்கும். நான் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. 35 வயதில் மத்திய மந்திரியாகி உலகத்தலைவர்களை சந்தித்து உள்ளேன். பா.ம.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேற்றம் அடையும்,

பாட்டாளி மாடல்

பா.ம.க. சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக மாதிரி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறோம். உண்மையான நிதிநிலை அறிக்கையை 2026-ம் ஆண்டு தாக்கல் செய்ய வேண்டும். தற்போது திராவிட மாடல் என்று கூறி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற புதிய யுக்தியை அமைத்து உள்ளது. இதன் மூலம் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். பாட்டாளி மாடல் ஆட்சி அமைந்ததும், முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். நிச்சயம் இது நடக்கும்.

எல்லோருக்கும் முறையான கல்வி கொடுப்போம். மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 11 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் ஒரு கட்சி கடவுளை வைத்தும், மற்றொரு கட்சி தமிழை வைத்தும் அரசியல் செய்கிறார்கள். சரபங்கா, திருமணிமுத்தாறு, பனமரத்துப்பட்டி ஏரி ஆகியவற்றை சீரமைத்து, தற்போது 1,000 அடியாக உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை, 50 அடிக்குள் கொண்டு வர பா.ம.க. நடவடிக்கை எடுக்கும். திட்டம் இருக்கிறது. ஆனால் அதிகாரம் நம்மிடம் இல்லை.

வாக்குகளாக மாற்ற வேண்டும்

நமக்கு வேண்டியது 20 சதவீத இடஒதுக்கீடு. ஆனால் 10.5 சதவீதம்தான் கிடைத்தது. அதுவும் கோர்ட்டில் உள்ளது. நிச்சயம் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பா.ம.க.வுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. அதை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் அனைத்து கிராமத்திலும் பா.ம.க. கொடி பறக்க வேண்டும். மேலும் பா.ம.க. கோட்டை சேலம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கண்ணையன், செயலாளர் குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகர், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் செல்வி ராமசாமி, மாவட்ட முன்னாள் செயலாளர் அண்ணாதுரை, வன்னியர் சங்க செயலாளர் எம்.ஜி.ஆர். என்ற மாதேஷ், சங்க தலைவர் கந்தசாமி, மாவட்ட முன்னாள் அமைப்பு செயலாளர் பெருமாள், இடங்கணசாலை நகர தலைவர் தன்ராஜ், நகர செயலாளர் மணி, மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி பச்சமுத்து, மகுடஞ்சாவடி ஊராட்சி மன்ற தலைவர் மேகலா மணிகண்டன், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி பாபு, நகர செயலாளர் சக்தி, ஒன்றிய செயலாளர்கள் சேட்டு (தெற்கு), இளவழகன் (வடக்கு), வைரவேல் (மேற்கு), அன்புகண்ணன் (ஓமலூர்), ஒன்றிய தலைவர்கள் நரேந்திரமோடி, மகேந்திரன், ரவி, சேலம் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கதிர் ராஜரத்தினம், ஒன்றிய முன்னாள் தலைவர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் நவநீதா செந்தில், சங்ககிரி ஒன்றிய செயலாளர் வீரா ஆறுமுகம், தலைவர் கேசவன், நகர செயலாளர் அய்யப்பன், தலைவர் பிரகாஷ், நகர முன்னாள் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் குமார், செல்வம், முரளி செல்வம், மாது, சவுந்தர், ராஜசேகர், மாதேஷ், மோகன்குமார், கலைக்கண்ணன், வேலுமணி, ஜெகதீஷ், சரவணன், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story