தனியார் நிதிநிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி


தனியார் நிதிநிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 16 May 2022 3:26 PM GMT (Updated: 16 May 2022 3:26 PM GMT)

தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி, மே.17-
தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த சிலர் கொடுத்த மனுவில், திருச்சி-தஞ்சைரோடு காந்திமார்க்கெட் அருகே 2018-ம் ஆண்டு முதல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் தினசரி சேமிப்பில் சீட்டு மூலம் பணம் செலுத்தி வந்தோம். முதல் 3 வருடங்கள் சரியான முறையில் நடந்து எங்களிடம் பணத்தை பெற்று கொண்டு, தற்போது 20 நாட்களுக்கும் மேலாக நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் போன் செய்து கேட்டபோது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. சுமார் 500 பேரிடம் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. ஆகவே இழந்த எங்கள் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ஆட்டோ டிரைவர்கள்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் குடும்பத்துடன் வந்து அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க டிரைவர்களும் இணைந்து பல வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மற்றொரு சங்கத்தினர் திடீரென பதாகை வைத்து சவாரி ஏற்றி வருகிறார்கள். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து நடவடிக்கை கோரி ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் மனுஅளித்தோம். தற்போது மீண்டும் இதே விவகாரத்தை நினைவூட்டி மனு அளித்துள்ளோம் என்று கூறி இருந்தனர். முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே கோஷமிட்டு சிறிதுநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதாகைகளால் ஆக்கிரமிப்பு
நாம் தமிழர் கட்சி மாநகர் மாவட்ட மகளிர் பாசறை சார்பில் அளித்த மனுவில், திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலையில் இருந்து  தொடங்கி காமராஜர் சிலை வரை உள்ள பகுதிகளில் வெளியூரில் இருந்து திருச்சி வரும் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பஸ் நிறுத்தங்களிலும் பஸ் வழித்தடம், பஸ்களின் எண் போன்ற விவரங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த பதாகைகள் தனியார் நிறுவனங்களின் ஒளிரும் விளம்பரப் பதாகைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு தகவல் தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ஆகவே இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டு, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம்இருந்து 386 மனுக்கள் பெறப்பட்டன.

Next Story