தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2022 9:29 PM IST (Updated: 16 May 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

குடிநீர் திட்டம்

பொள்ளாச்சியில் தேங்காய் விலை குறைந்ததை சுட்டி காட்டுவதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தேங்காய், கொய்யா, எலுமிச்சை பழங்களை கொண்டு வந்து சப்கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் நேற்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கிடைக்கும் 50.50 டி.எம்.சி.யில், ஒப்பந்தப்படி 30.50 டி.எம்.சி. தமிழகத்துக்கும், 19.55 டி.எம்.சி. கேரளாவுக்கும் வழங்க வேண்டும். 

இந்த தண்ணீர் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் பெறுகின்றன. இதற்கிடையில் தண்ணீர் கிடைக்காததால் கடைக்கோடி பகுதிகளுக்கும் குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ஆழியாறு அணையில் இருந்து ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. 

அனுமதிக்க கூடாது

ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி உள்ளது. ஆனால் 123 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. 

எனவே, ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இந்த திட்டத்தை ஆத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய போவதாக அச்சம் ஏற்பட்டு உள்ளது.

 எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆழியாறு அணையில் இருந்து வேறு திட்டங்கள் அல்லது வெளிமாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. தென்னை விவசாயிகளின் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளாக தேங்காய் ஒன்றுக்கு ரூ.20-க்கும் குறையாமல் பாதுகாத்து வந்தோம். தற்போது தேங்காய் விலை குறைந்ததால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது, வேளாண்மை துறை அமைச்சர் உடனடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று பதில் கூறினார். ஆனால் இதுவரை பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்படாமல் உள்ளது. 

இன்றைய நிலவரப்படி தோப்புகளில் ரூ.10, ரூ.12 என விலை பேசி வியாபாரிகள் தேங்காயை கொள்முதல் செய்கின்றனர். தேங்காயை மரத்தில் இருந்து பறித்து உறிப்பதற்கு ஒரு தேங்காய்க்கு ரூ.3 கூலி கொடுக்க வேண்டி உள்ளது. 

எனவே, தென்னை விவசாயிகளை பாதுகாக்க உடனடியாக அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய்க்கு மாநில அரசு கிலோ ஒன்றுக்கு ரூ.10 மானியம் அளித்து, கிலோ ரூ.115-க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 முன்னதாக எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக வந்து சப்-கலெக்டர் அலுவலகம் முன் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கலந்துகொண்டவர்கள்

இதில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், முத்துகருப்பணசாமி, திருஞானசம்பந்தம், செந்தில், வடக்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி, நிர்வாகிகள் ரகுபதி, ஓ.கே.முருகன், ஜேம்ஸ்ராஜா, செல்வி பத்மினி, அருணாசலம், கனகராஜ், ரங்கநாதன், காளிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story