பா.ஜனதா பிரமுகர் தற்கொலையில் ஹனிடிராப்பில் சிக்கி உயிரை மாய்த்தது அம்பலம்


பா.ஜனதா பிரமுகர் தற்கொலையில் ஹனிடிராப்பில் சிக்கி உயிரை மாய்த்தது அம்பலம்
x
தினத்தந்தி 16 May 2022 9:30 PM IST (Updated: 16 May 2022 9:30 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், பா.ஜனதா பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக ஹனிடிராப்பில் சிக்கியதால் அவர் உயிரை மாய்த்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு:

பா.ஜனதா பிரமுகர் தற்கொலை

  பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹீரோஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்தராஜூ. இவர் பா.ஜனதா பிரமுகர் ஆவார். மாநகராட்சி தேர்தலில் ஹீரோஹள்ளி வார்டில் 2 முறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு இருந்த ஆனந்தராஜூ தோல்வி அடைந்து இருந்தார். ஆனாலும் ஹீரோஹள்ளி வார்ட்டில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளை அவர் செய்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி ஆனந்தராஜூ தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உடல்நலக்குறைவால் ஆனந்தராஜூ தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் ஆனந்தராஜூ தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

கடிதம் சிக்கியது

  இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆனந்தராஜூ எழுதிய கடிதம் அவரது மனைவி சுமாவுக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில், ‘சுமா என்னை மன்னித்து விடு, நான் உன்னை ஏமாற்றி விட்டேன். ஹனிடிராப்பில் நான் சிக்கி கொண்டேன். உன்னிடம் மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லை. நமது குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்’ என்று கூறி இருந்தார்.

  மேலும் அந்த கடிதத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேரின் பெயர்களையும், ஆனந்தராஜூ குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த கடிதத்துடன் பேடரஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்ற சுமா தனது கணவர் ஆனந்தராஜூவை தற்கொலைக்கு தூண்டியதாக கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரேகா, அவரது கணவர் வினோத், ரேகாவின் தோழி ஸ்பந்தனா ஆகியோர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் சுமா கூறி இருந்ததாவது:-

மிரட்டி பணம் பறிப்பு

  ‘எனது கணவர் ஆனந்தராஜூக்கும், கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரேகா என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி கொண்டனர். இந்த நிலையில் ரேகா கேட்டு கொண்டதன்பேரில் எனது கணவர் அவரது ஆபாச புகைப்படங்களை அனுப்பி இருந்தார். இந்த நிலையில் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி எனது கணவரிடம் இருந்து ஹனிடிராப் முறையில் ரேகா மிரட்டி பணம் பறித்தார்.

  இதற்கு ரேகாவின் கணவர் வினோத், ரேகாவின் தோழி ஸ்பந்தனா உடந்தையாக இருந்தனர். எனது கணவரிடம் தொடந்து பணம் கேட்டு மிரட்டியதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இதுபற்றி எனக்கு தெரியவந்ததும் அவருக்கு நான் தைரியம் கூறினேன். ஆனாலும் ரேகா தொடர்ந்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்’.
  இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

  அந்த புகாரின்பேரில் ஆனந்தராஜூவை தற்கொலைக்கு தூண்டியதாக ரேகா, வினோத், ஸ்பந்தனா ஆகியோர் மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story