தினத்தந்தி புகாா்பெட்டி


தினத்தந்தி புகாா்பெட்டி
x
தினத்தந்தி 16 May 2022 9:31 PM IST (Updated: 16 May 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் புகாா் தொிவிக்கும் பகுதி

ஈ தொல்லை

ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால் மேட்டில் இருந்து சடையம்பாளையம் செல்லும் ரோட்டில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகளை தரம் பிரித்து மக்க வைக்கும் செயலை தினமும் மாநகராட்சி ஊழியர்கள் செய்கின்றனர். இந்த குப்பை கிடங்குக்கு அருகில் 50 குடியிருப்புகள் உள்ளன. குப்பைகளை மக்க வைக்கும்போது துர்நாற்றம் அதிக அளவில் வீசுகிறது. முக்கியமாக ஈ தொல்லை இந்த பகுதியில் அதிகம் உள்ளது. சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் உணவுப்பொருட்கள் மீது ஈ உட்கார்ந்து கொள்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பை கிடங்கை சுற்றிலும் வலை கட்டி ஈ வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பொதுமக்கள், ஈரோடு.
  
  
 குண்டும், குழியுமான ரோடு

  புஞ்சைபுளியம்பட்டி ஆதிபராசக்தி கோவிலில் இருந்து எஸ்.ஆர்.டி. சந்திப்பு வரையும், பின்னர் அங்கிருந்து வெங்கநாயக்கன்பாளையம் காலனி செல்லும் ரோடும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழை நேரங்களில் குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த வழியாக பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் செல்வதில் சிரமப்படுகிறார்கள். எனவே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
  
  
  
மின் கம்பத்தில் செடி-கொடிகள் 

  அந்தியூரை அடுத்த வெள்ளையம்பாளையத்தில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. மேலும் மின் கம்பத்தில் பொருத்தப்பட்ட பியூஸ் கேரியரில் இருந்து ஒயரும் தொங்கி கொண்டு இருக்கிறது. எனவே ஏதேனும் பெரிய மின் விபத்து ஏற்படும் முன் செடி, கொடிகளை அகற்றுவதுடன், தொங்கி கொண்டிருக்கும் ஒயர்களையும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ரவீந்திரன், புதுப்பாளையம்.

ரோட்டில் ஓடும் சாக்கடை நீர்

  ஈரோடு சுவஸ்திக் கார்னரில் இருந்து சத்தி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சத்தி ரோட்டில் சாக்கடை நீர் செல்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  ராஜா, ஈரோடு.
  
  
பாதியில் விடப்பட்ட பாலம்

  அந்தியூர் கெட்டி விநாயகர் கோவில் அருகே தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும் பணி பல மாதங்களாக முடிக்கப் படாமல் பாதியிலேயே உள்ளது. தரைப்பாலம் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள் அங்கேயே சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிதறி கிடக்கிற ஜல்லி கற்களால் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைய நேரிடுகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட பாலத்தின் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், அந்தியூர்.


Next Story