மத்திய அரசின் தவறான கொள்கையால் நூல்விலை உயர்வு


மத்திய அரசின் தவறான கொள்கையால் நூல்விலை உயர்வு
x
தினத்தந்தி 16 May 2022 4:06 PM GMT (Updated: 16 May 2022 4:06 PM GMT)

மத்திய அரசின் தவறான கொள்கையால் நூல்விலை உயர்வு

அனுப்பர்பாளையம்:
மத்திய அரசின் தவறான கொள்கையால் நூல்விலை உயர்ந்துள்ளதாக  திருப்பூரில் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி குற்றம் சாட்டினார். 
பொதுக்கூட்டம்
தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., தெற்கு மாநகரம், 55-வது வட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் பெரிச்சிபாளையத்தில்நடைபெற்றது. கூட்டத்திற்கு கருவம்பாளையம் பகுதி அவைத்தலைவர் தம்பி ப.குமாரசாமி தலைமை தாங்கினார். 55-வது வட்ட செயலாளர் ஆதவன் ப.முருகேசன் வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன், 3-வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, நல்லூர் பகுதி செயலாளர் மேங்கோ பழனிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இள.புகழேந்தி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்ப்பிரியன், திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 
இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி பேசியதாவது:-
இந்திய துணை கண்டத்தின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்றுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். திருப்பூர் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஊராகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ஊராகவும் திருப்பூர் உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் திருப்பூர் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் தவறான கொள்கையால் நூல்விலை உயர்ந்துள்ளதால், திருப்பூர் பனியன் தொழில் அழிவு நிலைக்கு சென்றுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உதயசூரியன் பிறந்துள்ளது.
 இந்தியாவில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.வை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்தியாவை வெளிநாட்டிற்கும், தனியாருக்கும் விற்று வருகின்றனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவு அளித்து வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை தமிழனாக ஏற்றுக் கொள்ள முடியுமா?. கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தை நாசமாக்கியது அ.தி.மு.க. அரசு. 
இனி நல்லாட்சிதான்
நாம் அனைவரும் திராவிட தமிழர்கள், தமிழச்சிகளாக இருக்க வேண்டும். உலகத்திற்கே வழி காட்டியவன் தமிழன். உலக அளவில் 60 சதவீதம் தமிழர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். பா.ஜ.க. எதை செய்தாலும் அதை ஆதரிக்கும் எடுபிடியாக அ.தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.  இனி வரும் காலமெல்லாம் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சிதான். 
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story