தேதியை சொன்னால் கிழமையை கூறும் சிறுவன்
2 ஆண்டுகளில் உள்ள தேதியை சொன்னால் கிழமையை கூறும் சிறுவனை கலெக்டர் பாராட்டினார்.
வேலூர்
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சங்கீதபிரியா. இவர்களுக்கு 5 வயதில் ரக்ஷன் என்ற மகன் உள்ளான். இவன் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அனைத்து தேதிகளும் என்ன கிழமைகளில் வரும் என்பதை மனப்பாடம் செய்துள்ளான். அதாவது, இந்த இரு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு தேதியை குறிப்பிட்டு கேட்டால் அந்த தேதி என்ன கிழமையில் வரும் என்பதை சரியாக கூறுவான்.
இந்த திறமையை அவனது பெற்றோர் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த சிறுவனை பெற்றோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்தனர். அப்போது சிறுவனின் திறமை குறித்து அவர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கலெக்டர் பல்வேறு தேதிகளை குறிப்பிட்டு சிறுவனின் திறமையை சோதித்தார். அப்போது, சிறுவன் அந்த தேதிகளில் வரும் அனைத்து கிழமைகளையும் சரியாக தெரிவித்தான்.
இதைப்பார்த்து கலெக்டர் வியப்படைந்தார். மேலும் சிறுவனைப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார். மேலும் சிறுவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story